செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கூட்ட நெரிசலை தவிர்க்க தடுப்பூசி போட டோக்கன் வினியோகம்

Published On 2021-04-23 04:04 GMT   |   Update On 2021-04-23 04:04 GMT
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் டோக்கன் கொடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரமாக திருப்பூரில் நடந்து வருகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தடுப்பூசி போடுகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மேலும் 13 ஆயிரத்து 920 டோஸ் கோவிஷீல்டு திருப்பூருக்கு வந்தது. தொடர்ந்து இந்த தடுப்பூசி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி வந்தது குறித்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் பலரும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தடுப்பூசி போட படையெடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன் பெறுகிறவர்களுக்கு சம்பந்தப்பட்ட நாள் மற்றும் நேரம் குறித்து தெரிவிக்கப்படுகிறது.

அந்த நேரத்திற்கு சென்று அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் என பலரும் சிரமம் இன்றி பணியாற்றி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பலரும் தடுப்பூசி போட குவிந்து வருவதால் பல இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. தற்போது இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் எந்தவித பிரச்சினையும் இன்றி பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி செல்கிறார்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News