லைஃப்ஸ்டைல்
தியானம்

தியானம் அனைவருக்கும் சாத்தியமா?

Published On 2020-04-06 04:33 GMT   |   Update On 2020-04-06 04:33 GMT
தியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. இப்போது தியானத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம்.

முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்). உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது.

ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப்போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது. உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள்.

அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள். இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும். ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள். விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.
Tags:    

Similar News