செய்திகள்
சந்திரசேகரராவ்

48 ஆயிரம் பஸ் ஊழியர்கள் நீக்கம் - சந்திரசேகரராவ்

Published On 2019-10-08 04:58 GMT   |   Update On 2019-10-08 07:36 GMT
தெலுங்கானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்களை அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் பணியிலிருந்து நீக்கியுள்ளார்.

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் சம்பள உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், புதிய பஸ் வாங்குதல் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

ஊழியர்கள் சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து தெலுங்கானாவில் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் ஓடவில்லை

வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடந்த 5-ந்தேதி மாலைக்குள் பஸ் ஊழியர்கள் பணிக்கு திரும்பவேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

இதையடுத்து 1500 ஊழியர்கள் மட்டும் பணிக்கு திரும்பினர். இந்தநிலையில் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் அரசு பஸ் ஊழியர்களை அதிரடியாக நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டார்.

மேலும் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் 2500 பஸ்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 4000 தனியார் பஸ்களும் பொது போக்குவரத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் தசரா பண்டிகை விழா நடைபெறும் நிலையில் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து சந்திரசேகர ராவ் கூறும்போது, ‘‘மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை பற்றி கவலைபடாமல் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம்’’ என்றார்.

சந்திரசேகர ராவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பஸ் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் குறித்து பதில் அளிக்குமாறு அம்மாநில ஐகோர்ட்டு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News