செய்திகள்
ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபம்

மாநகராட்சி சொத்து வரி நோட்டீஸ்: ரஜினி மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Published On 2020-10-14 11:31 GMT   |   Update On 2020-10-14 11:31 GMT
ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக ரஜினி வழக்கு தொடர்ந்திருந்தார்.
சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரியாக நிலுவையில் உள்ள ரூ.6.50 லட்சத்தை செலுத்தும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி ராகவேந்திரா திருமண மண்டப உரிமையாளரான நடிகர் ரஜினிகாந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாகவே இருந்ததால் சொத்து வரியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், கொரோனா கால வரி குறைப்புக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு தகுதி உள்ளது என அந்த மனுவில் ரஜினிகாந்த் கூறியிருந்தார்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். அத்துடன், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் நீதிபதி எச்சரித்தார். வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக ரஜினி தரப்பு வழக்கறிஞர் கூறினார். வழக்கை திரும்ப பெறுவது தொடர்பாக மனு அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து ரஜினி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் சொத்து வரி நோட்டீசுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Tags:    

Similar News