செய்திகள்
கைது

கிருஷ்ணகிரியில் கம்பளி வியாபாரியை எரித்து கொல்ல முயன்ற வாலிபர் கைது

Published On 2020-10-18 05:33 GMT   |   Update On 2020-10-18 05:33 GMT
கிருஷ்ணகிரியில் கம்பளி வியாபாரியை எரித்து கொலை செய்ய முயன்ற வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது அண்ணனை தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் அருகே உள்ள லைன்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் காதர்பாஷா (வயது 38). கம்பளி வியாபாரி. இவர் கடந்த 11-ந் தேதி பெங்களூரு சாலையில் உள்ள டான்சி அருகே கம்பளி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர், கம்பளி வாங்க விலை கேட்டதுடன், விலை குறைத்து தருமாறு பேரம் பேசினர். ஆனால் விலையை குறைத்து தர முடியாது என காதர்பாஷா கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், காதர்பாஷாவிடம் தகராறு செய்து விட்டு அங்கிருந்து சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த 2 வாலிபர்களும் மீண்டும் காதர்பாஷாவிடம் தகராறு செய்து அவரை தாக்கியதுடன், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த காதர்பாஷாவை மீட்டு அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், ராயக்கோட்டையை அடுத்த கொப்பக்கரை அருகே உள்ள சென்னேகொத்தள்ளியை சேர்ந்த ரவிச்சந்திரன் (28), அவரது அண்ணன் சாரதி (30) ஆகிய 2 பேரும் காதர்பாஷா மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து, ரவிச்சந்திரனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது அண்ணன் சாரதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News