உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 712 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2022-01-28 09:22 GMT   |   Update On 2022-01-28 09:22 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 712 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கூறியுள்ளார்.
தூத்துக்குடி:

கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 20&வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை  (29-ந் தேதி)  நடக்கிறது.  

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,  அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடம் என மொத்தம் 712 இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 50 சிறப்பு முகாம்கள் மற்றும் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 662 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளலாம்.

மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள்,  நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிஅலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் 60 வயதை தாண்டிய இணை நோய் உள்ள முதியோர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளலாம்.

தடுப்பூசி மையங்களில் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள், வருவாய் துறை, ஊரக மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவுப் பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கல்வித்துறை, தன்னார் வலர்கள், காவல்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலதுறை அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.    

சிறப்பு முகாம்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் எண் மற்றும் தொலை பேசி எண் கொண்டுவந்து பதிவு செய்து கொரோனா தடுப்பூசி செலுத்தி உயிர் இழப்பை தவிர்க்குமாறு கலெக்டர் செந்தில்ராஜ் கேட்டு கொண்டுள்ளார்.
Tags:    

Similar News