செய்திகள்
வேதாரண்யம் தாலுக்கா செட்டிப்புலத்தில் அகல்விளக்கு உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளர்.

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் அகல்விளக்கு உற்பத்தி பாதிப்பு

Published On 2019-11-29 12:23 GMT   |   Update On 2019-11-29 12:23 GMT
வேதாரண்யம் பகுதியில் தொடர் மழையால் அகல்விளக்கு செய்யும் பணி முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்கா, செட்டிபுலம், செம்போடை ஆகிய பகுதிகளில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். இவர்கள் காலம் காலமாக மின் எந்திரங்கள் உதவியில்லாமல் திருவை வைத்து கையால் மண்பாண்டம் மற்றும் அகல் செய்து வருகின்றனர்.

இவர்கள் அகல்விளக்கு, சட்டி, பானை, குடம், பூந்தொட்டி, அடுப்பு, திருமண சடங்குகளுக்கு உள்ள மண்பாண்டங்கள், கும்பாபிஷேக கலயங்கள் செய்து விற்பனை செய்கின்றனர். மண் எடுப்பதில் மிகுந்த சிரமம் உள்ளதால் ஒரு மாட்டு வண்டி களிமண் லோடு ரூ.1,500 விலைக்கு வாங்கி மண்பாண்டங்களை செய்கின்றனர். இந்தாண்டு பண்டிகை காலமான கார்த்திகை, பொங்கல் ஆகியவற்றிற்கு மண்பாண்டங்கள் செய்ய தயாரானபோது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதால் இத்தொழில் முற்றிலும் முடங்கியது. மழையிலும் கார்த்திகைக்கு அகல்விளக்கு செய்யும் பணி சிறிதளவு நடைபெறுகிறது. மழையால் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விளக்குகள் செய்யும் ஒரு குடும்பத்தினர் சுமார் ஆயிரம், 2 ஆயிரம் விளக்குகளே செய்துள்ளனர்.

இதனால் தொழிலில் லாபம் இருக்காது என தொழிலாளர்கள் தெரிவித்தனர். மேலும் சென்ற ஆண்டு பொங்கலுக்கு உற்பத்தி செய்த சட்டி, பானைகள் விற்பனை ஆகாமல் உள்ளன. இத்தொழிலில் மண்பாண்டங்கள் செய்து சுடுவதற்கு என்று சரியான சூளை வசதிகூட இல்லாமல் உள்ளனர்.

இப்பகுதியில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வங்கிகடனோ, அரசு உதவியோ கிடைக்கவில்லை. மின் எந்திரங்கள் இல்லாமல் திருவையிலேயே வைத்து செய்வதால் பெரிய அளவில் தொழில் செய்ய முடியவில்லை.

நவீனமாக மெழுகில் செய்யும் விளக்குகள் விற்பனைக்கு வந்தாலும் மண் விளக்குகளுக்கு இன்றும் மவுசு குறையாமல் விற்பனை நன்றாக உள்ளது. தற்போது எவர்சில்வர் அலுமினிய பாத்திரங்கள் உபயோகத்திலிருந்து மக்கள் மெல்ல மெல்ல மண்பாண்ட சமையலுக்கு திரும்பி வருகின்றனர்.

அதனால் வரும் காலங்களில் மண்பாண்டம் விற்பனை நன்றாக இருக்கும். எனவே அரசு எங்களுக்கு வங்கி மூலம் கடன் கொடுத்து உதவினால் மின் உபகரணங்கள் வாங்கி உற்பத்தியை பெருக்கி அதிகலாபம் பெறமுடியும் என மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News