செய்திகள்
பென்ஸ் கார்

சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு அசத்தலான பரிசு வழங்கும் எச்.சி.எல்.

Published On 2021-07-22 13:21 GMT   |   Update On 2021-07-22 13:21 GMT
எச்சிஎல் நிறுவனம் தனது ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் 2013ம் ஆண்டு 50 ஊழியர்களுக்கு கார்களை பரிசாக வழங்கியது.
பெங்களூரு:

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., சிறப்பாக வேலை செய்பவர்களை ஊக்குவிப்பதாக 50 பேருக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம், நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சலுகைகள் தருவது ஊழியர்களை மேலும் நன்கு பணிசெய்யத் தூண்டும் என நிர்வாகம் கருதுகிறது.

இந்நிறுவனத்தில் 2013ல் ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் 50 நபர்களுக்கு கார் வழங்கப்பட்டது. அதன்பின் நடைமுறையில் இல்லை. தற்போது மீண்டும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைமை மனிதவளத் துறை அதிகாரி அப்பாராவ் கூறுகையில், ‘ஒரு வேலையில், வேறு ஒருவரை நியமிப்பதற்கு, 15 முதல் 20 சதவீதம் வரை அதிகம் செலவாகிறது. எனவே, ஊழியர்களை திறன் மிகுந்தவர்களாக மாற்றுவதில், அதிக கவனம் செலுத்துகிறோம். ‘கிளவுடு’ உள்ளிட்ட சில பிரிவுகளில் ஆட்களை பணியமர்த்துவதற்கு அதிகம் செலவு பிடிக்கிறது’ என்றார்.

இதேபோல் தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்கும் வகையில் பிற நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சலுகைகளை அறிமுகபடுத்தி உள்ளன. பாரத்பே நிறுவனம் சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபுள்யூ பைக், ஐபேடு, துபாய் பயணம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News