செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2021-11-14 04:21 GMT   |   Update On 2021-11-14 04:21 GMT
இந்த மாத இறுதிக்குள் 2-ம் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சென்னை விருகம்பாக்கத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா தடுப்பூசி முகாம் மற்றும் வீடு தேடி சென்று தடுப்பூசி போடும் திட்டம் நல்ல பலனை தந்துள்ளது.

இன்றும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 33 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் 2-ம் கட்ட தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாமலே சிலருக்கு போட்டதாக சான்றிதழ் தரப்பட்டுள்ளதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. தொழில் நுட்ப பிரச்சினையால் அந்த மாதிரி ஒரு சில நிகழ்வுகள் நடந்துள்ளன. இனிமேல் தவறுகள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாதிரி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...கோவை மாணவி தற்கொலை விவகாரம்- தலைமறைவான பள்ளி முதல்வர் கைது

Tags:    

Similar News