செய்திகள்
அதிமுக

தமிழகம் முழுவதும் அதிமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

Published On 2020-01-10 04:23 GMT   |   Update On 2020-01-10 04:23 GMT
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாநில செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட ரூ.1000 ரொக்கம் மற்றும் பரிசு தொகுப்பு வழங்க ஆணையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் மகத்தான வெற்றிக்கு வித்திட்ட அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றிதெரிவிப்பது.

சட்டம்-ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் பெற்றதற்கு மத்திய அரசின் சாதனை விருது பெற்றதற்கு பாராட்டு, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் தமிழக வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 10.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தந்த முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவிப்பது.

தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றும் வகையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வழி காட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாணவர் அணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News