உள்ளூர் செய்திகள்
கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொலைக்கு பழி தீர்க்க வெடிகுண்டுகள் தயாரிப்பு?- கைதான 3 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2022-01-19 06:56 GMT   |   Update On 2022-01-19 06:56 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது வத்திராயிருப்பு. இங்குள்ள வ.புதுப்பட்டியில் இருந்து கான்சாபுரம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அவர்கள் அங்குள்ள அர்ச்சனாபுரம் பெரியஓடை அருகே சென்றபோது எதிரே 3 பேர் வந்தனர். அவர்கள் வனத்துறையினரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த வனத் துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

வத்திராயிருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை சோதனை செய்தனர். அங்கு முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 பைகளை சந்தேகத்தின் அடிப்படையில் கைப்பற்றி பார்த்தனர். அந்த பையில் கலர் கல ராக 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. இதனை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடம் வந்து வெடிகுண்டுகளை பார்வையிட்டனர். விசாரணையில் கைப்பற்றப்பட்டவை நாட்டு வெடிகுண்டுகள் என தெரியவந்தது. பாதுகாப்பு கருதி அந்த வெடிகுண்டுகள் ஓடைப் பகுதியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.

அதனை பதுக்கியவர்கள் யார்? தப்பி ஓடியவர்கள் யார்? என போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில் தப்பி ஓடிய 3 பேரும் வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 23), சின்னமணி (20), சரத்குமார் (20) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கிறிஸ்டியான பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் ஓரு தரப்பினரால் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு பழி வாங்குவதற்காக எதிர்தரப்பினரை தாக்க வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

கைதான 3 பேரும் சுபாஷ் தரப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வத்திராயிருப்பில் முகாமிட்டு நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News