ஆன்மிகம்
யானை மலை யோக நரசிம்மர் ஆலயம்

யானை மலை யோக நரசிம்மர் ஆலயம்

Published On 2019-11-11 01:41 GMT   |   Update On 2019-11-11 01:41 GMT
பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, மதுரை மாவட்டத்தில் உள்ள, யானை மலை யோக நரசிம்மர் ஆலயம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சமணம், சைவம், வைணவ வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட மலை, இயற்கையில் யானை வடிவில் அமைந்த அழகிய மலை, பாண்டியர், சோழர், நாயக்கர் என பலரும் திருப்பணி செய்த ஆலயம், குடவரை கோவில்கள் அமைந்த மலை, திருமோகூர் பெருமாள் கஜேந்திர மோட்சம் நிகழ்த்தும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, மதுரை மாவட்டத்தில் உள்ள, யானை மலை யோக நரசிம்மர் ஆலயம்.

தல வரலாறு :

யானை மலை எனும் இந்த மலையில் சமணம், சைவம், வைணவம் முதலிய மூன்று ஆலயங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. நடுநாயகமாக யோக நரசிம்மர் அமர்ந்துள்ளார். அருகில் லாடர் கோவில் எனும் முருகன் ஆலயம், உச்சியில் சமணர் குகைகள், யானைமலையின் வடகோடியில் வேத நாராயணப் பெருமாள் கோவில் என பக்தி மணத்தோடு இந்த மலை விளங்குகிறது.

கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் நாயக்கர் காலம் வரை பல்வேறு காலகட்டங்களில் இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்பாடல், தமிழ் வட்டெழுத்துக்கள், பாறைச் சிற்பங்கள், குடவரைக் கோவில்கள், கட்டிடக் கோவில்கள் இந்த மலையில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் சமணர் வாழ்ந்ததை, திருஞானசம்பந்தர் தமது தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் வரகுண பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சராக விளங்கிய மாறன்காரி மற்றும் அவனது தம்பி மாறன் எயினன் ஆகிய இருவரால், குடவரைக் கோவில் மற்றும் முன்மண்டபம் எழுப்பப்பட்டதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

மதுரையில் இருந்து இத்தலம் வரும் போது, பிரமாண்ட மலை நம்மை வரவேற்கும். அங்கு யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் கண்டு வியக்கலாம். இதன் காரணமாக இம்மலை ‘யானை மலை’ ஆனது.

இதற்கு மற்றொரு கதையும் உண்டு. பாண்டி யனின் வீரத்தால் வெற்றி பெற இயலாத சோழமன்னன் ஒருவன், தன் நாட்டில் வாழ்ந்த சமணர்களின் உதவியை நாடினான். அதன்படி அசோக மரத்தின் கீழ் யாகம் வளர்த்து, மூவுலகும் நடுங்கச் செய்யும் பெரும் யானையை உருவாக்கி, மதுரையை நோக்கி ஏவினர்.

இதனை ஒற்றர் மூலம் அறிந்த பாண்டிய மன்னன், அதனைத் தடுத்துக் காத்திட மதுரை மீனாட்சி சுந்தரேசுவரரை வேண்டினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. அதன்படி மதுரைக்கு வெளியே அட்டாலை மண்டபம் ஒன்றைக் கட்டினான். அம்மண்டபத்தின் சேவகனாக சிவபெருமானே தோன்றி, சமணர்கள் ஏவிய யானையை அடித்தார். அதுவே, யானை மலையானது என்ற வரலாறும் கூறப்படுகிறது.

அந்த மலையில், யோக நரசிம்மருக்குக் கோவில் அமைத்ததை பெரும்பற்றப்புலியூர் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம், இங்கு பாண்டிய மன்னனின் மகன் திருக்குளம் வெட்டியதைக் குறிப்பிடுகிறது.

ஆலய அமைப்பு :

யோகநரசிம்மர் திருக்கோவில், பெரிய திருச்சுற்றுச் சுவருக்குள், யோக நரசிம்மர் சன்னிதி, நரசிங்கவல்லித் தாயார் சன்னிதி ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. தாயார் கருணை பொழியும் திருமுகத்துடன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். தாயார் சன்னிதியைக் கடந்தால் நரசிம்மன் சன்னிதியைக் காணலாம். அதை நோக்கி செல்லும் போது, கருட மண்டபமும், அதனுள் கருடனும் அமைந்திருக்கிறது. இங்கே சிம்மங்களைத் தாங்கி நிற்கும் பெருந்தூண்கள், சிறிய தூண்கள் அமைந்துள்ளன. இதனைக் கடந்து குடவரைக்குள் யோக நரசிம்மர் அருள்காட்சி வழங்குகிறார்.

கருவறையின் வெளியே, வடதிசையில் விநாயகர் சன்னிதி, அதனையொட்டி மிகப் பெரிய அழகிய தாமரைக்குளம் அமைந்துள்ளன. இத்தலத்திற்குத் திருமோகூர் காளமேகப் பெருமாள், கள்ளர் வேடத்தில் எழுந்தருளி வழங்கும், கஜேந்திர மோட்ச விழா நடைபெறும். நரசிம்மர் ஜெயந்தி மற்றும் மாத சுவாதி நட்சத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கல்வெட்டுகள் :

யோக நரசிங்கப் பெருமாள் கோவிலில் கிடைத்த ஒன்பது கல்வெட்டுகள் பல்வேறு செய்திகளைக் கூறுகின்றன. முதல் வரகுண பாண்டியன் (கி.பி. 765), முதல் மதுராந்தகச் சோழன் (கி.பி. 907), சடையவர்ம சுந்தர பாண்டியன் (கி.பி. 1021), சடையவர்மன் ஸ்ரீவல்லப பாண்டியன் (கி.பி. 1101), முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (.கி.பி. 1216), கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509) என பல்வேறு மன்னர்களின் திருப் பணிகளையும் அவர்கள் காலத்தில் வழங்கப்பட்ட கொடைகளையும் அறிய முடிகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டத்தில், யானை மலை திருத்தலம் உள்ளது. மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழித்தடத்தில் 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் இருக்கிறது. மதுரையில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. சொந்த வாகனத்தில் வருவோர் யா.ஒத்தக்கடையின் வழியே வந்தால் சுலபமாக வரலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி மினி பஸ் வசதி உள்ளது.

பனையபுரம் அதியமான்
Tags:    

Similar News