செய்திகள்
முத்தரசன்

விவசாயிகளின் போராட்டம் பற்றி பிரதமர் பேச மறுக்கிறார் - முத்தரசன்

Published On 2021-10-09 08:44 GMT   |   Update On 2021-10-09 13:45 GMT
ஜனநாயகத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசாங்கம் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிராக பல சட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்கு துன்பங்களை செய்து கொண்டிருக்கிறது என முத்தரசன் கூறியுள்ளார்.

தென்தாமரைகுளம்:

குமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளத்தில் சுதந்திர போராட்ட வீரரும், குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி தலைவருமான வேலாயுதத்தின் நூற்றாண்டு நினைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாடு எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை பார்க்கும்போது அபாயகரமானதாகவும் கவலையளிப்பதாக உள்ளது.

நாடு விடுதலை பெற்று 75-ம் ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில், ஜனநாயகத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசாங்கம் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிராக பல சட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்கு துன்பங்களையும் துயரங்களையும் அழித்துக் கொண்டிருக்கிறது. அப்படி நிறைவேற்றப்பட்ட சட்டம் தான் வேளாண் மசோதா சட்டம்.

இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இது அபாயகரமான சட்டம். இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த 11 மாத காலமாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்தை பற்றி நம் நாட்டின் பிரதமர் மோடி பேச மறுக்கிறார். பதவியில் இருப்பவர்களுக்கு பொதுமக்கள் தங்களின் எதிர்ப்பை காட்ட கருப்பு கொடி காட்டுவது என்பது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. அந்த வகையில் ஒரு மாநிலத்தின் துணை முதல்வருக்கு கருப்பு கொடி காட்டப்பட்டது. ஆனால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்திருக்கிறார்கள்.

ஒரு மத்திய அமைச்சரின் மகனே இந்த செயலை செய்திருக்கிறார். தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியில் 8 நபர்கள் இறந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த மாநில முதல்வர் அந்த சம்பவம் குறித்து எதுவும் சொல்லவில்லை. எந்த குரலும் எழுப்பவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் 2 பேரை கைது செய்திருக்கிறார்கள்.


முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பதற்கு உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது மத்திய அரசு அந்த அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதை எதையும் செய்யவில்லை.

பாசிசக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட அரசு ஒருபோதும் வெற்றி பெறாது. மோடி அரசு பாசிச முறையில் ஆட்சி நடத்த முயற்சி செய்கிறது. இந்த வேளாண் மசோதா சட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் நாட்டில் மேலும் பல் வேறு பிரச்சினைகள் உருவாகும். இதற்கெல்லாம் மோடி அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Tags:    

Similar News