செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்

பெண்களுக்கு சொந்த நாட்டிலேயே பாதுகாப்பு இல்லையா? - பாராளுமன்றம் முன் இளம்பெண் போராட்டம்

Published On 2019-11-30 08:22 GMT   |   Update On 2019-11-30 08:22 GMT
சொந்த நாட்டிலேயே என்னால் பாதுகாப்பாக இருக்கிறேன் என உணர முடியவில்லையே ஏன்? என்ற முழக்கத்துடன் இளம்பெண் ஒருவர் பாராளுமன்ற வளாகம் முன் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுடெல்லி:

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் தெலுங்கானாவில் பெண் தாசில்தார் ஒருவர் தனது அலுவலகத்தினுள்ளேயே கொடூரமாக எரித்துக் கொலை செய்யப்பட்டார். 

அந்த அதிர்ச்சியிலிருந்து அம்மாநில மக்கள் விடுபடுவதற்குள் கடந்த 27ம் தேதி ஐதராபாத் புறநகர் பகுதியில் பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, கொடூரமாக கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து அனு துபே என்ற இளம்பெண் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

பாராளுமன்றத்தின் 2-3 வது வாயில்களின் நடைபாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர் ‘எனது சொந்த நாட்டிலேயே என்னால் பாதுகாப்பை உணர முடியவில்லையே, ஏன்?’ என கோஷமிட்டார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவரை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். 

ஆனால், அவர் மறுத்ததால் அவரை பாராளுமன்றம் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளைச் சொல்லி தேம்பித்தேம்பி அழுத அந்த இளம்பெண்ணை, போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News