செய்திகள்
சபரிமலை

சபரிமலையில் அறுவை சிகிச்சை மையம், மருத்துவ முகாம்கள்- கேரள அரசு முடிவு

Published On 2020-11-12 04:39 GMT   |   Update On 2020-11-12 04:39 GMT
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு மருத்துவ முகாம்கள் மற்றும் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை: 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி வருகிற 16-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தற்போது கொரோனா தொற்று காரணமாக கேரள அரசு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்துள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் செயல் திட்ட நடவடிக்கைகள் குறித்து மந்திரி சைலஜா கூறியதாவது:-

சபரிமலை பக்தர்கள் சிறப்பு சிகிச்சை மற்றும் கவனிப்பை உறுதி செய்வதற்காக கோட்டயத்தில் 27 சிறப்பு டாக்டர்கள் மற்றும் 1,000 சுகாதார ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். டாக்டர்கள் வாரத்திற்கு ஒரு முறையும், ஊழியர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். தேவைக்கு ஏற்ப கூடுதல் டாக்டர்களும் நியமிக்கப்படுவார்கள்.

பம்பையில் இருந்து சன்னிதானம் வரை மருத்துவ முகாம்கள் மற்றும் பல்வேறு மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். சன்னிதானம் (கோவில் வளாகம்) செல்லும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் படபடப்பு, மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு போன்றவைகளுக்கு சன்னிதானத்தில் ஒரு அவசர அறுவை சிகிச்சை மையம், பல்வேறு இடங்களில் சிறப்பு மருந்தகங்கள், உயிர்காக்கும் ஆக்ஸிஜன் உபகரணங்கள் ஆங்காங்கே வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

மேலும் மோசமான காற்றோட்டம், நெரிசலான இடங்கள், பக்தர்கள் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நோய் தடுப்பு விதிமுறைகளை பக்தர்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். சுவாச கோளாறு, காய்ச்சல், சளி மற்றும் பிற நோய்கள் இருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு வர வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News