செய்திகள்
பராக் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தல்- ஜோ பிடனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் ஒபாமா

Published On 2020-10-17 09:42 GMT   |   Update On 2020-10-17 09:42 GMT
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட முன்னாள் அதிபர் ஒபாமா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் அடுத்த மாதம் 3-ந் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்த சூழலில் கடந்த 1-ந் தேதி ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதற்காக ராணுவ ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற டிரம்ப், தற்போது கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பிடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் அந்த நபரிடம் இருந்து ஜோ பிடனுக்கும் வைரஸ் பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. 

இதையடுத்து ஜோ பிடனுக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாக அவரது பிரசாரக் குழுவின் மேலாளர் ஜென் டில்லேன் தெரிவித்தார்.

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், வரும் 19-ம்தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 

இந்த நிலையில் ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டத்தில் ஜோ பிடனுக்காக அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. 

பிரச்சாரத்தில் டிரம்ப்பிற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைப்பார் என்று தெரிகிறது. டிரம்பை விட பிடனுக்கு தான் அதிக மக்கள் ஆதரவு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஒபாமாவின் பிரச்சாரம் குறித்து தனது ஆதரவாளர்களிடையே டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ‘ஒபாமா ஒரு பிரயோஜனமற்ற பிரச்சாரகர். இது 2016 ஆம் ஆண்டைப் போலவே எனக்கு ஒரு நல்ல செய்தி. அந்த தேர்தலில் அவர்கள் மோசமான பணிகளை செய்தார்கள், அதனால்தான் நான் உங்கள் ஜனாதிபதியாக இருக்கிறேன்’ என்று கூறினார்.
Tags:    

Similar News