செய்திகள்
கோப்புபடம்

சென்னையில் குட்கா விற்பனை செய்த 39 பேர் கைது - 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2021-07-26 13:13 GMT   |   Update On 2021-07-26 13:13 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சென்னையில் குட்கா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
சென்னை:

தமிழகத்தில் ‘குட்கா’ உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அப்போது முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா தடை விதித்தார்.

அதன் பிறகு குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நாளடைவில் இந்த நடவடிக்கை பிசுபிசுத்தது.

இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சட்ட விரோதமாக சென்னையில் குட்கா விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. செங்குன்றத்தில் உள்ள ஒரு குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் குட்கா விற்பனைக்கு லஞ்சம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சோதனையும் நடைபெற்றது.

இந்தநிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு குட்கா விற்பனையை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் குட்கா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், போலீசார் சென்னை மாநகரம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை மாநகரம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்த 39 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1,051 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் பகுதியில் குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த முத்து, ஜோசப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிக்கரணை பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சஞ்சய்காந்தி, குமரன், கிரன் ஆகியோரும் கைதானார்கள். அவர்களிடம் இருந்து 257 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புகையிலை பொருட்களின் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தங்களது பகுதியில் குட்கா விற்பனையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News