செய்திகள்
ப.சிதம்பரம்

ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜனதா நெருக்குகிறது- ப.சிதம்பரம்

Published On 2019-12-08 07:28 GMT   |   Update On 2019-12-08 07:28 GMT
ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜனதா நெருக்குகிறது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். அப்போது மழை பெய்ததால் குடைபிடித்தபடி ப.சிதம்பரம் பேசியதாவது:-

பா.ஜனதாவின் நோக்கமே ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவதுதான்.

பா.ஜனதா கட்சி கங்கை ஆறு என்றும், அதில் மூழ்கி குளித்தால் அனைத்து பாவங்களும் நீங்கிவிடும் என்றும் அக்கட்சி கருதுகிறது. நான் ஒருபோதும் கங்கையில் (பா.ஜனதா) குளிக்கமாட்டேன்.

டெல்லியில் வெங்காயம் விலை ரூ.200-ஐ தொட்டுவிட்டது. கார் கம்பெனியில்கூட ஒரு லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டத்தில் வரியை மேலும் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நான் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். சிறையில் இருப்பது பெரிய வி‌ஷயம் அல்ல. காமராஜர், வ.உ.சி. போன்றவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதனால் சிறையில் இருந்தது மகிழ்ச்சிதான். சிறை கட்டிலில் படுத்ததால் என் கழுத்து எலும்பு சரியாகி உள்ளது. காங்கிரஸ் இயக்கம் இருக்கும் வரை, தொண்டர்கள் இருக்கும் வரை என்னை வீழ்த்த முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News