செய்திகள்
புதிய நகர பஸ்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

மக்கள் பயன்பாட்டுக்கு புதிதாக 15 நகர பஸ்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Published On 2020-01-13 18:24 GMT   |   Update On 2020-01-13 18:24 GMT
கரூர் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிதாக 15 நகர பஸ்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்:

கரூர் மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் பல்வேறு கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு செல்லும் வகையிலான புதிய நகர பஸ்களை (ரெட் பஸ்), கரூர் பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டுக்காக அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கரூரில் இருந்து புஞ்சை புகளூர் வழியாக வேலூருக்கும், தவிட்டுப்பாளையம் வழியாக வேலூருக்கும், மின்னாம்பள்ளி வழியாக வாங்கலுக்கும், ராமேஸ்வரப்பட்டி வழியாக வாங்கலுக்கும், பஞ்சமாதேவி வழியாக திருமுக்கூடலூருக்கும், மாயனூர் வழியாக காட்டுப்புத்தூருக்கும், சேங்கல் வழியாக பஞ்சப்பட்டிக்கு இரண்டு பஸ்களும், உப்பிடமங்கலம் வழியாக சேங்கலுக்கும், காணியாளம்பட்டி வழியாக மாமரத்துப்பட்டிக்கும், வெள்ளப்பாறை வழியாக வீரணம்பட்டிக்கும், கூடலூர் வழியாக கோட்டநத்தத்திற்கும் என 11 வழித்தடங்களிலும், சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பெருகமணி வழியாக பெட்டவாய்த்தலைக்கு இரண்டு பஸ்களும், பெட்டவாய்த்தலை வழியாக பனிக்கம்பட்டிக்கு 2 வழித்தடங்களிலும் என மொத்தம் 13 வழித்தடங்களில் ரூ.4 கோடியே 4 லட்சம் மதிப்பிலான 15 புதிய நகர பஸ்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதில் கீதா எம்.எல்.ஏ., கரூர் மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளர் குணசேகரன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தானேஷ் என்ற முத்துக்குமார், கரூர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.திருவிகா மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூரில் நகரப்பகுதிகளில் இயங்கும் வகையில், 13 வழித்தடங்களுக்கு புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. தமிழக அரசின் சார்பில் 5,000 புதிய பஸ்கள் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2,000 பஸ்கள் புதிதாக இயக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அதனடிப்படையில், பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து வசதிகளுடனும் கூடிய பஸ்கள் இயக்கப்படுகிறது. படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள், இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள், குறைந்த தூரத்தில் இயங்கக்கூடிய பஸ்களில் குளிர்சாதன வசதி, முதியவர்களும் உடல்நலக்குறைபாடுடையவர்களும், மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் கழிவறையுடன் கூடிய பஸ்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பஸ்கள், நகர பஸ்கள் என அனைவருக்கும் பயணத்தை எளிமையாக்கும் விதமாக புதிய பஸ்களை இயக்கி, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை அரசு வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னை, சேலம், கோவை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாநகரப்பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாலை விதிகளை கடைபிடிப்பது, விபத்துகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரசார வாகனம் தயாராகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்திய அளவில் சாலை விபத்து களின் எண்ணிக்கையை குறைத்த மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அதற்காக மத்திய அரசு வழங்க உள்ள விருது தமிழக அரசுக்கு கிடைக்க இருக்கிறது. விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க தொடர்ந்து முனைப்போடு போக்குவரத்து துறை செயல்பட்டு வருவதற்கு இதுவே சான்று. ராஜஸ்தானில் இருந்து கூட வந்து, தமிழகத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கைளை கேட்டறிந்து அங்கு செயல்படுத்தியிருப்பது நமக்கு பெருமையான ஒன்றாகும். கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, 8 ஒன்றியங்களிலும் தலைவர், துணை தலைவர் பதவியை மக்கள் ஆதரவுடன் அ.தி.மு.க. கைப்பற்றியிருக்கிறது. தொடர்ச்சியான மக்கள் பணியின் மூலமாகவே, இத்தகையை 100 சதவீதம் வெற்றியை எங்களுக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலும் எங்களது வார்டு உறுப்பினர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஒருவர் மட்டும் கூடுதலாக வந்து இணைந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News