செய்திகள்
காசி

காசியின் கூட்டாளியை பிடிக்க சர்வதேச போலீஸ் மூலம் நடவடிக்கை- சி.பி.சி.ஐ.டி. அதிகாரி தகவல்

Published On 2020-09-30 10:12 GMT   |   Update On 2020-09-30 10:12 GMT
வெளிநாட்டில் பதுங்கியுள்ள காசியின் கூட்டாளியை பிடிக்க சர்வதேச போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் காசி (வயது 27), கோழிக்கடை நடத்தி வருகிறார். இவர் வசதி படைத்த பெண்களுடனும், பட்டதாரி பெண்களுடனும் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் அவர்களுடன் நெருக்கமாக இருந்தபோது புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் காசி மீது புகார் அளித்தனர்.

அதன்பேரில் காசி மீது நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், நேசமணிநகர் போலீஸ் நிலையம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அலக்சாண்டிரா பிரஸ் ரோட்டை சேர்ந்த டிராவிட் என்பவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாகவும், அவரது மோட்டார் சைக்கிளை மிரட்டி வாங்கியதாகவும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பெண்களிடம் பணம் பறிக்க காசிக்கு உதவி செய்த டேசன் ஜினோ என்பவரை கைது செய்தனர். அதன்பிறகு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி காசியையும், அவரது கூட்டாளி தினேஷ் என்பவரையும் கைது செய்தனர்.

அதே சமயம் காசியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் வெளிநாட்டில் உள்ளார். அவரை பிடித்தால் வழக்கு விசாரணைக்கு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் வெளி நாட்டிலேயே பதுங்கி இருப்பதால் அவரை பிடிப்பதில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து சர்வதேச போலீஸ் மூலம் அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

மேலும் அவர் சர்வதேச போலீசாரிடம் சிக்காமல் தப்பிச் செல்ல முயன்றால் அவரை பிடிப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே காசியின் கூட்டாளி எப்போது நாடு திரும்பினாலும் உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கைது செய்யப்படுவார் என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “காசி மீதான கந்து வட்டி வழக்கில் ஏற்கனவே குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து பெண்களை ஆபாசபடம் எடுத்து மிரட்டிய வழக்கில் விரைவில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும்“ என்றார்.
Tags:    

Similar News