செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 734 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-05-12 18:21 GMT   |   Update On 2021-05-12 18:21 GMT
தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 734 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளில் வீடு, வீடாக சென்று சளிமாதிரி சேகரிக்கப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 335 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 734 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், 500-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் வேலூரில் சிகிச்சைக்காக வந்த பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள் 50 பேரும் பாதிக்கப்பட்டனர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 734 பேரும் சிகிச்சைக்காக அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், உடன் பணிபுரிந்த அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 31 ஆயிரத்து 809 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 ஆயிரத்து 244 சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். 442 பேர் உயிரிழந்துள்ளனர். 3,123 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பை உணராமல் பலர் வழக்கம்போல் சாலைகளில் சுற்றித்திரிகிறார்கள். தொற்றை கட்டுப்படுத்த முழுஊரடங்கை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் பாதிப்பு படிப்படியாக குறையும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News