செய்திகள்
கோப்புப்படம்

5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பண வீக்கம் 7.4 சதவீதமாக உயர்வு

Published On 2020-01-14 09:55 GMT   |   Update On 2020-01-14 09:55 GMT
நாட்டின் சில்லறைப் பண வீக்கம் கடந்த 5½ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
சென்னை:

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

நாட்டின் சில்லறைப் பண வீக்கம், நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்கள்தான் இந்த பண வீக்கத்தை தீர்மானிக்கும். கடந்த 2018-ம் ஆண்டு சில்லறைப் பணவீக்கம் 2.11 சதவீதமாக இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சில்லறை பண வீக்கம் 5.54 சதவீதமாக அதிகரித்தது.

தற்போது இந்த பண வீக்கம் 7.35 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. கடந்த சில தினங்களாக உணவுப் பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டதே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம்தான் இந்த அளவுக்கு சில்லறை பண வீக்கம் இருந்தது. 5½ ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உச்சத்தை பண வீக்கம் எட்டியுள்ளது.

வெங்காயம் விலையில் கடந்த சில வாரங்களாக மிக கடுமையான உயர்வு காணப்பட்டது. இது மற்ற காய்கறிகளின் விலையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் உணவுப் பொருட்களின் பண வீக்கம் 14.1 சதவீதமாக உயர்ந்தது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு உணவு பண வீக்கம் இந்த அளவுக்கு இப்போதுதான் அதிகரித்துள்ளது.

காய்கறிகள் விலை மட்டும் 60 சதவீதம் உயர்ந்தது. பருப்பு வகைகள் விலை 15.4 சதவீமும், உணவு பொருட்கள் விலை 12.2 சதவீதமும் உயர்ந்தது. இறைச்சி மற்றும் மீனின் விலை 10 சதவீதம் வரை இருந்தது.

இவ்வாறு தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது.

பண வீக்கத்தை எப்போதும் 4 சதவீதத்துக்குள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக உணவு பொருட்களின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்ததால் சில்லறைப் பண வீக்கம் அதிகரித்து விட்டது.

நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதற்காக ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கையை மாற்றி அமைத்தது. என்றாலும் வெங்காயம் விலை சில்லறை பண வீக்கத்தை பாடாதபாடு படுத்தி விட்டது.

அடுத்த மாதம் (பிப்ரவரி) ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பண வீக்கத்தை குறைப்பதற்கு தேவையான புதிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News