செய்திகள்
கோப்புப்படம்

அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் 11-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படும் - மத்திய அரசு நடவடிக்கை

Published On 2021-04-07 18:47 GMT   |   Update On 2021-04-07 18:47 GMT
சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் போடப்பட்டது.
புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. முதலில் சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கும் போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த பயனாளர்கள் நாள்தோறும் லட்சக்கணக்கான எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வீரியமாக பரவி வருகிறது. நாள்தோறும் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருவதுடன், 500-க்கும் மேற்பட்டோர் உயிரையும் பறிகொடுத்து வருகின்றனர்.



இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் மத்திய-மாநில அரசுகள், மறுபுறம் தடுப்பூசி போடும் பணிகளையும் வேகப்படுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் பணித்தளங்களிலேயே தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பொருளாதரத்தின் அமைப்பு சார்ந்த துறைகளிலும், வழக்கமான பணி அலுவலகங்கள் (அரசு மற்றும் தனியார்), உற்பத்தி மற்றும் சேவை துறைகளிலும் கணிசமான விகிதத்தில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பணியாற்றுகின்றனர்.

இந்த மக்களிடையே தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, 100 சதவீத பயனாளர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் கொண்ட இத்தகைய பணித்தளங்களில் (அரசு மற்றும் தனியார்) தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதற்காக தடுப்பூசி மையங்களுடன் இந்த பணித்தளங்களை இணைக்க வேண்டும்.

இதற்காக அரசு மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி இந்த பணித்தள தடுப்பூசி திட்டப்பணிகளை மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணித்தள தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கப்படலாம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.
Tags:    

Similar News