செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரும் அரசின் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றம்

Published On 2021-09-08 06:53 GMT   |   Update On 2021-09-08 08:15 GMT
இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் அப்போது எதிர்ப்பு தெரிவித்தன.

ஆனால் மத்திய அரசு சட்டத்திருத்த மசோதாவை மாற்ற முன்வரவில்லை. இந்த நிலையில் இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார்.

இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் மத சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உகந்ததாக இல்லை.

அகதிகளாக இங்கு வந்தவர்களை மத ரீதியாக பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் அந்த சட்டம் இருக்கிறது.



இந்த சட்டம் இலங்கைத் தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம். இலங்கை தமிழர்களை பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. சட்டப்படியான சமத்துவம், சட்டப்படியான பாதுகாப்பை அரசு மறுக்க முடியாது.

இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பிறகு இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


Tags:    

Similar News