செய்திகள்
கொரோனா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.

கொரோனா ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மைய பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2021-05-18 01:14 GMT   |   Update On 2021-05-18 01:14 GMT
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா ஒருங்கிணைந்த மைய (வார் ரூம்) பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக உள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை விரைந்து செய்யும் வகையிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளார். முதல் கட்டமாக மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமித்ததுடன், பொதுமக்களுக்கு அரசும் அதிகாரிகளும் உதவும் வகையில் கொரோனா ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் (வார் ரூம்) அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வார் ரூம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புதிதாக தொடங்கப்பட்டு உள்ள வார் ரூம் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்த அமைச்சர் சு.முத்துசாமி, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளின் அத்தியாவசிய சேவை குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன், மருந்து வகைகள், படுக்கை வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் போன்ற சந்தேகங்களுக்கு இந்த வார் ரூமை பொதுமக்கள் தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் பரிவாக பேசி வழிகாட்ட வேண்டும். இது தொடர்பாகவே அழைப்புகள் வரும் என்பதால் கடினம் காட்டாமல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். இங்கு ஒரு தாசில்தார், ஒரு டாக்டர், இரு மனநல நிபுணர்கள், அச்சுதம் அறக்கட்டளை சேவகர்கள் சுழற்சி முறையில் பணி செய்வார்கள்.

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 150 படுக்கைகள், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்புடன் உள்ளன. பெருந்துறை வளாகத்தில் 10 நாட்களில் கூடுதலாக 300 படுக்கைகளும், அடுத்தகட்டமாக மேலும் 300 படுக்கைகளும் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட உள்ளன.

தினமும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளின் படுக்கை வசதிகள், ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர், காப்பீடு வசதி பெறுதல் போன்ற விவரம் இந்த மையத்துக்கு வழங்கப்படும்.

அதன் அடிப்படையில் நோயாளிகள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கலாம். கொரோனா பரிசோதனை, ஸ்கேன் செய்தல், இறந்தவரை தகனம் செய்தல் போன்ற தேவைக்காக யாராவது தொடர்பு கொண்டாலும், அவர்களது செல்போன் எண்களை பெற்று உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டபிறகு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

முன்னதாக வார் ரூம் அலுவலகத்தை மாவட்ட மருத்துவ நலப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோமதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News