செய்திகள்
டிடிவி தினகரன்

தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.57 ஆயிரம் கடன் சுமை- டிடிவி தினகரன்

Published On 2020-02-14 08:06 GMT   |   Update On 2020-02-14 08:06 GMT
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.57 ஆயிரம் கடன் வைத்துள்ளதாக பட்ஜெட் குறித்து டி.டி.வி. தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சட்டசபையில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக நிதி நிலைமை சிக்கலாக இருப்பதாக இந்த நிதிநிலை அறிக்கையில் காண முடிகிறது. மத்திய அரிசிடம் இருந்த வரி பங்கு தொகை ரூ.7,500 கோடிக்கு மேல் வர வேண்டி உள்ளது.

தேர்தல் வரப்போகிறது என்பதற்காக இதை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.57 ஆயிரம் கடன் வைத்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி பட்ஜெட்டில் எதுவும் இல்லை.

அம்மா உணவகத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர். அம்மா உணவகம் ஜெயலலிதா இருந்த போது எப்படி இருந்தது. இப்போது எந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.



தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று பட்ஜெட்டில் குறிப்பிட்டு மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள்.

எத்தனையோ முறை அமைச்சர்கள் டெல்லி சென்று வருகிறார்கள். நிதியை கேட்டு வாங்க வேண்டியதுதானே? எனவே திறமையற்ற நிர்வாகத்திற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது.

அடையாறு கூவம் நதியை சீரமைக்க ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி உள்ளனர்.

ஏற்கனவே ஒதுக்கிய நிதியில் எந்த அளவு பணிகள் நடந்தது என்ற விவரம் இல்லை. இந்த நிதிநிலை அறிக்கை சிக்கலான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. இந்த பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியம் போல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கேள்வி:- 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக சபாநாயகரே முடிவு செய்யலாம் என்று கோர்ட்டு கூறி உள்ளதே?

பதில்:- சபாநாயகர் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கே:- குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர தி.மு.க. வலியுறுத்தி உள்ளதே. உங்கள் நிலைப்பாடு என்ன?

ப:- குடியுரிமை திருத்த சட்டம் என்பது நாட்டில் மதம் அடிப்படையில் யாரையும் பிரிக்க கூடாது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டமாக இருக்க வேண்டும். எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அ.ம.மு.க. வரவேற்கும் என்றார்.
Tags:    

Similar News