ஆன்மிகம்
காவிரி தாய்க்கு சீர் வரிசை

காவிரி தாய்க்கு சீர் வரிசை: யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு

Published On 2020-08-03 04:59 GMT   |   Update On 2020-08-03 04:59 GMT
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
வழக்கமாக ஆடிப்பெருக்கு விழாவின்போது, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி வழிநடை உபயங்கள் கண்டருளி அம்மா மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்று, பொதுமக்கள் சேவை நடைபெறும். பின்னர் நம்பெருமாள் காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பட்டுப் புடவை, மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து எடுத்து செல்லப்பட்டு, காவிரி ஆற்றில் விடப்படும்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று பகல் 2.30 மணிக்கு மேல் புறப்பாடாகி கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

பின்னர் அங்கிருந்து சீர்வரிசை பொருட்களை கோவில் அர்ச்சகர்கள் கையில் ஏந்தி ராஜகோபுரம் வழியாக அம்மா மண்டபத்தை வந்து அடைந்து, காவிரி தாய்க்கு சமர்பித்தனர். அதன்பிறகு ரெங்க விலாச மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, மாலை 6.45 மணிக்கு மேல் மூலஸ்தானத்தை சென்று அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததால் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Tags:    

Similar News