ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு

Published On 2020-09-01 06:10 GMT   |   Update On 2020-09-01 06:10 GMT
மதுரை மீனாட்சி அம்மனை காண வரும் பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் உத்தரவின்படி இன்று அனைத்து கோவில்களும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பூஜை காலங்கள் நீங்கலாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோவிலுக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும்.

10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணிகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு உள்ளே வர அனுமதி இல்லை. கோவிலுக்குள் செல்போன் கொண்டு வர அனுமதியில்லை. பக்தர்கள் கோவிலுக்குள் தேங்காய், பழம், மாலை கொண்ட வர தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை.

கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அம்மன் சன்னதி கிழக்கு வாசலில் நுழைந்து அஷ்டசக்தி மண்டபம், மீனாட்சி நாயக்கர் மண்டபம், இருட்டு மண்டபம், பொற்றாமரைக்குளம் கிழக்குப்பகுதி, தெற்குப்பகுதி மற்றும் கிளக்கூடு மண்டபம், கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் உள்ளே நுழைந்து தரிசனம் செய்யலாம். பின்னர் சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி, பத்திரகாளி அருகில் உள்ள வழியில் வெளியே வந்து அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

பக்தர்களுக்கு குங்குமம், விபூதி பிரசாதம் அர்ச்சகர்கள் நேரடியாக வழங்க தடை செய்யப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் மூலம் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு கோவிலில் எந்த இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது.

பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News