செய்திகள்
தற்காலிக மார்க்கெட்டில் இன்று காலை காய்கறிகள் வாங்க திரண்டவர்களை காணலாம்.

நெல்லை, தென்காசி காய்கறி மார்க்கெட்டுகளில் இரவு நேரத்தில் சரக்குகள் இறக்க அனுமதி

Published On 2021-05-18 08:09 GMT   |   Update On 2021-05-18 08:09 GMT
தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட், ஆலங்குளம் தையல் நாயகி மார்க்கெட், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் இரவு நேரங்களில் சரக்குகளை இறக்குவதற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நெல்லை:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்கறி மார்க்கெட்டுகள் காலை 10 மணி வரை மட்டும் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலை மோதுவதால் அங்கு செயல்பட்டு வந்த சில்லறை கடைகள் சாப்டர் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

எனினும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் சரக்குகளை இரவு நேரங்களில் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது மொத்த மார்க்கெட் மட்டும் நயினார்குளத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் டவுன் ரதவீதிகளிலும் உள்ள ஏராளமான காய்கறி மற்றும் மளிகை கடைகளிலும் தொடர்ந்து கூட்டம் அதிகமாகவே இருந்தது.

இதனிடையே வெளி மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி மற்றும் பலசரக்கு உள்ளிட்டவற்றை சரக்கு வாகனங்களில் இருந்து இரவு நேரத்தில் இறக்குவதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்து வந்தனர்.

இதனால் காலை 10 மணிக்குள் அவற்றை இறக்க முடியாமலும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொடுக்க முடியாமலும் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர்.

எனவே லாரிகளில் இருந்து சரக்குகளை இரவு நேரத்தில் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என நெல்லை மாநகர வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்று நேற்று முதல் இரவு 9 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை கனரக வாகனங்களில் இருந்து இறக்கி கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

அதே போல் காலை 6 மணி முதல் 10 மணி வரை இலகு ரக வாகனங்களில் இருந்து சரக்குகளை இறக்கி கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் நேற்று நெல்லை மாநகரில் நள்ளிரவு வரை மார்க்கெட்டுகள் பரபரப்பாக காணப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட், ஆலங்குளம் தையல் நாயகி மார்க்கெட், சுரண்டை மார்க்கெட்டுகளிலும் இரவு நேரங்களில் சரக்குகளை இறக்குவதற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனை ஏற்று மாலை 6 மணிக்கு மேல் நள்ளிரவு வரை வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்குகளை இறக்கி கொள்ளவும், கேரளாவுக்கு காய்கறிகள் மற்றும் இதர சரக்குகளை ஏற்றி அனுப்பி வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இலகு ரக வாகனங்களில் வரும் சரக்குகளை மதியம் 12 மணிக்கு மேல் இறக்கி கொள்ள அனுமதிக்கப்பட்டது.

ஆனாலும் கேரளாவில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆலங்குளம் மார்க்கெட்டில் நேற்று இரவு குறைந்த அளவே வாகனங்கள் சரக்குகளை ஏற்றி கொண்டு கேரளாவுக்கு சென்றன.
Tags:    

Similar News