செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து அம்மாபாளையம் பகுதியில் இன்று கடைகள் அடைப்பு

Published On 2021-09-20 12:39 GMT   |   Update On 2021-09-20 12:46 GMT
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி அம்மாபாளையத்தில் இன்று பொதுமக்கள் காத்திப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவிநாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கணபதி நகர் விரிவு மற்றும் கானக்காடு பாறைக்குழிகளில் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள், கழிவுகள் மற்றும் குப்பைகளை லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்டப்பட்டு  வந்தது. 

இதனால் சுவாச கோளாறு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே திருப்பூர் மாநகராட்சி இப்பகுதிகளில் குப்பை கழிவுகள் கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரி  அம்மாபாளையத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் இன்று காத்திப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க சென்றனர்.  

மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று அம்மாபாளையம் பகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
Tags:    

Similar News