செய்திகள்
எச் ராஜா

பொருளாதாரத்தை சீர்குலைத்த முதல் குற்றவாளி ப.சிதம்பரம்- எச். ராஜா

Published On 2019-09-13 05:04 GMT   |   Update On 2019-09-13 05:40 GMT
நாட்டில் உள்ள வங்கிகளையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த முதல் குற்றவாளி ப.சிதம்பரம் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவுடன் முழுமையாக இணைக்கப்படாமல் இருந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் ஒன்றாகியுள்ளது. நடக்காது என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்த ஒரு பிரச்சனையை மிக எளிதாக பிரதமர் முடித்து காட்டியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 1971-ல் இருந்து கவனித்து வருகிறேன்.

அரசியல் சட்டப்பிரிவு 21ஐ பற்றி பேச அவருக்கு எந்த தகுதியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. சாத்தான் வேதம் ஓதுவது போன்று அவருடைய பேச்சும், கருத்துக்களும் உள்ளன. வங்கி பணத்தை சூறையாடியது காங்கிரஸ்தான்.

ஊழலில் ஈடுபட்ட ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் டுவிட் செய்திருப்பது வேதனைக்குரியது. நாட்டில் உள்ள வங்கிகளையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த முதல் குற்றவாளி ப.சிதம்பரம். விரைவில் அவரைப்போல தமிழகக்தின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவரும் கைதாக இருக்கிறார். அதற்கு முன்னதாக தங்களுடன் இலவச இணைப்பில் உள்ள அந்த கட்சியை தி.மு.க. கழற்றி விட்டால் அவர்களுக்கு நல்லது.

நீர் மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும். போதுமான தடுப்பணைகளை கட்டவேண்டும் என்று தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக முதல்வர் பழனிசாமி, இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

விவசாயிகள் என்ற பெயரில் நாட்டில் உள்ள பணக்காரர்கள்தான் வங்கிகளில் இருந்து நகைக்கடன் பெறுகின்றனர். உண்மையான விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக நகைக்கடன் வழங்குவதில் புதிய முயற்சியை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் உண்மையான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

தோளில் பச்சை சால்வை அணிந்திருப்பவர்களை எல்லாம் விவசாயிகள் என்று கூறக்கூடாது. விளை நிலத்தில் வியர்வை சிந்தி உழைப்பவர்களை மட்டுமே விவசாயிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அகில இந்திய தலைமை யாரை அடையாளம் காட்டுகிறதோ, அவர் தான் தமிழக பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்பார். அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வோம். கட்சி நிர்வாகிகளுக்கு பதவி கொடுப்பது அகில இந்திய தலைமையின் முடிவு. இதில் பிற கட்சிகள் கருத்து சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News