செய்திகள்
கோப்புபடம்

பயிர்க்கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்பட 2 பேர் கைது

Published On 2021-02-20 12:09 GMT   |   Update On 2021-02-20 12:09 GMT
பயிர்க்கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தளவாய்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இங்கு செயலாளராக சிவாஜி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு 200 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள பயிர்கடன்களை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.ஆனால், அதில் 17 விவசாயிகளுக்கு முறைகேடாக கடன் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அதை தள்ளுபடி செய்ய முடியாது என்றும் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் செல்வராஜா(45) தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் அது தொடர்பாக ஆய்வு நடத்திய இணை பதிவாளர், பயிர் கடன் வழங்கியதில் முறைகேடு நடக்கவில்லை என்றும், அந்த கடன்களை தள்ளுபடி செய்யலாம் என்றும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் துணை பதிவாளர் செல்வராஜா, அந்த கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது, தள்ளுபடி பட்டியலில் அந்த கடன்களை சேர்க்க வேண்டும் என்றால் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு உடந்தையாக ஆனைமலை கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம்(45) இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க செயலாளர் சிவாஜி, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். உடனே போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர். அவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தில் வைத்து, அந்த பணத்தை ஆனைமலை கூட்டுறவு சங்க முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகத்திடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைத்து இருந்த துணை சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், விஜயலட்சுமி, சசிலேகா மற்றும் போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்தனர். இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் செல்வராஜா, முதுநிலை ஆய்வாளர் ஆறுமுகம் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News