செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரை போலீசார் மடக்கி பிடித்த போது எடுத்த படம்.

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி

Published On 2020-11-21 09:38 GMT   |   Update On 2020-11-21 09:38 GMT
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை 9.45 மணி அளவில் ஒரு முதியவர் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அவசர, அவசரமாக பணிக்கு சென்று கொண்டு இருந்தனர்.

இந்தநிலையில், அந்த முதியவர் பையில் வைத்து இருந்த பெட்ரோல் கேனை எடுத்து, உடல் மீது ஊற்றினார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று கருதி முதியவரை நோக்கி ஓடி வந்து, அவர் கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். உடனே அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உருண்டு, புரண்டு கதறி அழ தொடங்கினார். அவரை சமாதானப்படுத்தி போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(வயது 65) என்பதும், குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் அறக்கட்டளையின் முன்னாள் தலைவரும் என்பது தெரியவந்தது. தற்போது அந்த அறக்கட்டளைக்கு வேறு ஒருவர் தலைவராக உள்ளார். இந்த நிலையில் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பாலகிருஷ்ணன் வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்தும் பாலகிருஷ்ணனுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாலகிருஷ்ணன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News