ஆன்மிகம்
ஆவணி திருவிழா கொடியேற்றத்தையொட்டி கொடி மரத்திற்கு மகாதீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

Published On 2021-08-27 08:21 GMT   |   Update On 2021-08-27 08:21 GMT
கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 7-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது.

திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடந்தது.

கொடியேற்றத்தையொட்டி கொடிபட்டம் கோவில் கிரிபிரகாரத்தை சுற்றி வந்தது. அதனை தொடர்ந்து 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் மகாதீபாராதனை நடைபெற்றது.

கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

கொடியேற்றம் உள்பட திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் யூ-டியூப் மூலம் பக்தர்கள் காண கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்தவாறே அதனை பார்த்து தரிசனம் செய்தனர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், திருவாடுதுறை ஆதீனத்தை சேர்ந்த அம்பலவாண சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா நாட்களில் நடைபெறும் சப்பர பவனி, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது.

கோவிலின் ஆகமவிதிப்படி அனைத்து நிகழ்ச்சி களும் பணியாளர்கள் மூலம் நடக்கிறது.

Tags:    

Similar News