செய்திகள்
சென்னையில் இருந்து புறப்பட்ட சீன அதிபர்

இரண்டு நாள் பயணம் முடிந்து நேபாளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

Published On 2019-10-12 08:19 GMT   |   Update On 2019-10-12 08:19 GMT
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழகம் வந்திருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று மதியம் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை:

சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்றது. நேற்று மாலை மாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு பகுதியில் தொடங்கி பல்வேறு சுற்றுலா பகுதிகளை இருவரும் பார்வையிட்டனர். கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.

இன்று காலை பிரதமர் மோடி தங்கி இருந்த தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கண்ணாடி அறையில் இருந்தபடி கடலையும் இயற்கையும் ரசித்தபடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவை பலப்படுத்துதல், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர்.



இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கோவளம் ஓட்டலில் இருந்து புறப்பட்டார் சீன அதிபர். அவரை ஓட்டல் வாசல் வரை வந்து மோடி வழியனுப்பினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சீன அதிபர், நேராக சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானத்தில் தனது குழுவினருடன் நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News