செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் ராம்விலாஸ் பாஸ்வான்

வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு - கட்டுப்படுத்த மத்திய மந்திரி தலைமையில் ஆலோசனை

Published On 2019-11-06 09:10 GMT   |   Update On 2019-11-06 09:10 GMT
இந்தியர்கள் வீட்டு சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயராமல் கட்டுப்படுத்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
புதுடெல்லி:

நாடு முழுவதும் வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெங்காயம் விளைச்சல் இருந்தாலும் அது போதுமானதாக இல்லாததால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்படுகிறது.
 
இதில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இருந்து கிடைக்கும் வெங்காயம் பெரிய அளவில் பளபளப்பாக காணப்படுவதால் இது முதல் ரகமாக கருதப்படுகிறது.

ஆந்திராவில் இருந்து கிடைக்கும் வெங்காயம் சுமாரான அளவில் சிவப்பு நிறத்தில் காணப்படுவதால் இதன் விலை குறைவாக இருக்கும். ஆனால் இதை பலர் வாங்க விரும்பவதில்லை.

தற்போது வெளி மாநிலங்களில் வெங்காய சாகுபடி மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து விட்டது. தமிழகத்தில் 1 கிலோ வெங்காயம் ரூ.80 வரை விற்கப்படுகிறது.



வெங்காய விலையை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம் வெளி சந்தைக்கு எடுத்து வரப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டது.

ஆனாலும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் வெங்காயம் வரத்து குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயராமல் கட்டுப்படுத்த மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

மத்திய உணவுத்துறை செயலாளர் ரவிகாந்த் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் ஏ.கே.ஸ்ரீவத்சவா ஆகியோருடன் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வது, உள்நாட்டில் விலை ஏற்றத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News