செய்திகள்
கொரோனா வைரஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 2,326 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-05-18 04:25 GMT   |   Update On 2021-05-18 04:25 GMT
ஒரு பக்கம் நோய் தொற்று பரவல், மற்றொரு பக்கம் ஊரடங்கால் வருமானம் பாதிப்பு என இரட்டை துயரத்தில் மக்கள் தவித்து வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஊரடங்கு அறிவித்த கடந்த மே 10-ந்தேதி முதல் நேற்று வரை 2 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆயிரத்து 233 பேர் குணமாகி வீடு திரும்பினர்.

தினமும் 300 பேர் வரை பாதிக்கப்படுவதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ஒரு பக்கம் நோய் தொற்று பரவல், மற்றொரு பக்கம் ஊரடங்கால் வருமானம் பாதிப்பு என இரட்டை துயரத்தில் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு இப்போது மருத்துவ உதவியும், நிவாரணமும் அவசியம் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவித்தும் சாலைகளில் மக்கள் நடமாட்டம் சிறிதும் குறைந்தபாடில்லை. எல்லா சாலைகளிலும் இரு சக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் அதிகமாக செல்கின்றன.

இவற்றை பார்க்கும்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு விட்டதோ என்ற கேள்வி எழுகிறது. ஆங்காங்கே சோதனைக்காக நிற்கும் போலீசார் இதனை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. அப்படியே நிறுத்தி கேட்டாலும், பொதுமக்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி செல்கின்றனர்.

இதுபோன்ற ஊரடங்கால் கொரோனா பரவலை எப்படி கட்டுப்படுத்த முடியும்? அனுமதிக்கப்பட்ட காலை 10 மணிக்கு மேல் போலீசார் வாகன போக்குவரத்தையும், மக்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த ‘கிடுக்கி பிடி’ நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் முன்கள பணியாளர்களிடம் காட்டும் சோதனையை மற்றவர்களிடம் காட்டுவது கிடையாது. கட்சி கொடியுடன் செல்லும் வாகனங்களை போலீசார் கண்டு கொள்ளாத நிலை தொடருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பதுடன், விதிமுறைகளை கடைபிடிக்காத பொதுமக்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தயவு தாட்சயமின்றி நடவடிக்கை எடுக்கும் வரை ஊரடங்கு வெறும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளை அதிகரிக்காமல், கட்டுப்பாடுகளை அதிகரித்தால் தான் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

Tags:    

Similar News