செய்திகள்
கோப்புபடம்

தடுப்பூசி திருவிழா... தமிழகத்தில் தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு

Published On 2021-04-11 05:59 GMT   |   Update On 2021-04-11 07:46 GMT
தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா காலத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் விடுபட்டவர்களை வீடு வீடாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை:

இந்தியா முழுவதும் இன்று முதல் 4 நாட்கள் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நாள்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் போடுவதற்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க தமிழகத்தில் ஏற்கனவே கடந்த ஜனவரி 16-ந் தேதி 600 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி தற்போது வரை 1 கோடியே 39 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் 37 லட்சத்து 32 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் விடுபட்டவர்களை வீடு வீடாக கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் நாள்தோறும் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பாக வருகிற 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை அந்தந்த மாட்டத்தில் தடுப்பூசி திருவிழா என்று அறிவித்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு தடுப்பூசி போட அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

அதிக நபர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும், தடுப்பூசி முகாம்களை தேவைக்கு ஏற்ப நடத்த சுகாதாரத்துறையும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

விருப்பமுடைய நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளாட்சித்துறை அதிகாரிகளை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 18 லட்சம் டோஸ் கோவிஷீல்டு, கோவேக்சின் மருந்துகள் அரசின் கையிருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News