செய்திகள்

ஆதார் தகவல்களை நீக்குவது குறித்து டெலிபோன் நிறுவனங்கள் 15 நாளில் திட்டத்தை சமர்ப்பிக்க ஆதார் ஆணையம் உத்தரவு

Published On 2018-10-01 19:59 GMT   |   Update On 2018-10-01 19:59 GMT
ஆதார் தகவல்களை நீக்குவது தொடர்பாக15-ந் தேதிக்குள் ஆதார் ஆணையத்துக்கு டெலிபோன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்திட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. #UIDAI #Telecom #Aadhaar
புதுடெல்லி:

டெலிபோன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் 12 இலக்கம் கொண்ட ஆதார் அட்டை தகவல்களை பெறவேண்டியது கட்டாயமில்லை என்று கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் டெலிபோன் நிறுவனங்கள் பெற்ற தகவல்களை நீக்குவது குறித்த நடவடிக்கையை ஆதார் ஆணையம் தொடங்கி உள்ளது.



இதுபற்றி ஆதார் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், ‘டெலிபோன் சேவை வழங்கும் அத்தனை நிறுவனங்களும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை ஏற்று உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே, வாடிக்கையாளர்களை அறிவோம் திட்டத்திற்காக பெற்ற ஆதார் தகவல்களை நீக்குவது தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துவது குறித்த திட்டங்களை வருகிற 15-ந் தேதிக்குள் ஆதார் ஆணையத்துக்கு டெலிபோன் சேவை வழங்கும் அனைத்து நிறுவனங்களும் சமர்ப்பித்திட வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இதுபற்றி ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி அஜய் பூஷண் கூறுகையில், “டெலிபோன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் பெற்ற ஆதார் தகவல்களை சுமூகமாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்காகத்தான் இது தொடர்பான திட்டத்தை அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இதில் எங்கள் தரப்பில் இருந்து ஏதாவது தேவை என்றால் டெலிபோன் நிறுவனங்கள் அளித்த திட்டங்களுக்கு பின்னர் இதுபற்றி தெரிவிக்கப்படும்” என்றார்.  #UIDAI #Telecom #Aadhaar
Tags:    

Similar News