செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதல் நபர்: கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-03-23 17:21 GMT   |   Update On 2020-03-23 17:21 GMT
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், மேலும் 3 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் மேலும் 3 நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பினால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 12519 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வீட்டிலேயே கண்டிப்பாக இருக்க வேண்டும். வீட்டில் தனிமையாக இருங்கள் என்பது வேண்டுகோள் அல்ல... அரசின் உத்தரவு...

மதுரையை சேர்ந்த 54 வயதான நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவருக்கு வெளிநாட்டு தொடர்பு எதுவும் இல்லை. அவர் தமிழகத்தில் கொரோனா பரவிய முதல் நபர் ஆவார். லண்டனில் இருந்து வீடு திரும்பிய திருப்பூரை சேர்ந்த 25 வயது நபருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஈ.எஸ் .ஐ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, கன்னியாகுமரி, திருவாரூர் உட்பட 10 மாவட்டங்களில் பாதிப்பு அதிகம்.

1 கோடி முககவசங்கள் . 500 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். மேலும் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனை 300 படுக்கைகளுடன் தயாராகி வருகிறது. மேலும் அங்கு மற்ற சிகிச்சைகளுக்கு அனுமதி இல்லை.

புரசைவாக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நபர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News