ஆன்மிகம்
சக்கரபாணி கோவில்

கும்பகோணத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த 5 வைணவத் திருக்கோவில்கள்

Published On 2020-09-21 01:29 GMT   |   Update On 2020-09-21 01:29 GMT
‘கோவில் நகரம்’ என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இவற்றுள் 5 வைணவத் திருக்கோவில்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
‘கோவில் நகரம்’ என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இங்கு நடைபெறும் மகாமக உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் 12 சிவாலயங்களில் இருந்தும், 5 வைணவ திருக்கோவில்களில் இருந்தும், மகாமக குளத்திற்கு சுவாமிகள் தீர்த்தவாரி காண வருவார்கள். இவற்றுள் 5 வைணவத் திருக்கோவில்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்.

சாரங்கபாணி கோவில்

கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்கள் பலவற்றில், முதன்மையானதாக விளங்குகிறது, சாரங்கபாணி திருக்கோவில். ஏம முனிவர் என்பவர், திருமாலை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். அவர் முன்பாகத் தோன்றிய மகாவிஷ்ணு, “உனக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன். நீ கும்பகோணம் சென்று அங்குள்ள அமுதவாவி தீர்த்தத்தில் நீராடி தவம் புரிந்து வா” என்று அருளினார். அதன் படியே ஏம முனிவரும், கும்பகோணம் வந்து தவம் செய்துகொண்டிருந்தார். அப்படி அவர் தவம் இருந்தபோது ஒரு நாள், அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர் மீது, ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து வந்து தன் மகளாக வளர்த்தார். ‘கோமளவல்லி’ என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், ‘திருமாலை மணம் முடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் தவம் இயற்றத் தொடங்கினாள்.

கோமளவல்லியின் பக்திக்கு மனமிரங்கிய திருமால், ஏம முனிவருக்கு அருளாசி வழங்கியதோடு, கோமளவல்லியையும் மணந்துகொண்டார். இதன் நினைவாகவே இன்றளவும், இந்தக் கோவிலில் தை மாதம் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில், திருக்கல்யாாண உற்சவம் நடத்தப்படுகிறது. கருவறையில் ஐந்து தலை நாகத்தின் மீது பள்ளிகொண்டபடி சயன கோலத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார்.

ராஜகோபால சுவாமி கோவில்

கும்பகோணம் பெரிய கடைத் தெரு பகுதியில் அமைந்திருக்கிறது, ராஜகோபால சுவாமி கோவில். மகாமகம் அன்று, அங்குள்ள குளத்தில் தீர்த்தமாடும் வைணவக் கோவில்களில் இந்தக் கோவிலின் பெருமாளும் ஒருவர். இந்தக் கோவிலில் மூலவராகவும் உற்சவராகவும் ராஜகோபால சுவாமியே வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ருக்மணி, சத்யபாமா, அலமேலுமங்கை, செங்கமலவள்ளி ஆகிய தாயார்களும் வீற்றிருந்து அருள்புரிகிறார்கள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’, ‘அரசன்’ என்று பொருள். ‘பாலன்’ என்றால் ‘சிறுவன்’ என்று அர்த்தம். ஏழை-எளிய மக்களுக்கு கேட்டதை வழங்கும் இறைவனாக, இங்கு ராஜகோபால சுவாமி வீற்றிருக்கிறார். இத்தல இறைவன், துணைவியரோடு அலங் காரப் பிரியனாக, ராஜ கம்பீரம் பொருந்தியவராக, எண்ணற்ற அணி கலன்களை உடலில் பூட்டியபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

மன்னார்குடியிலும், ராஜகோபால சுவாமி கோவில் ஒன்று உள்ளது. ஆனால் அங்கு மூலவராக மட்டுமே இறைவன் வீற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிவராகப் பெருமாள் கோவில்

வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை வழிபடுவதற்காக, சனகாதி முனிவர்கள் வருகை தந்தனர். அப்போது வைகுண்டத்தில் வாசல் காப்பாளர்களாக இருந்த விஜயன், ஜெயன் ஆகிய இருவரும், முனிவர்களைத் தடுத்தனர். இந்த நிலையில் நாராயணரே, வைகுண்ட வாசலைத் திறந்துகொண்டு வந்து முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார். அவரை தரிசனம் செய்த முனிவர்கள், தங்களுக்கு அனுமதி வழங்க மறுத்த ஜெயன், விஜயன் இருவரையும் அரக்கர்களாக பிறக்க சாபமிட்டனர். தானே அவர்களுக்கு சாப விமோசனம் அளிப்பதாக நாராயணர் கூறினார். அதன்படி பூலோகத்தில் பிறந்தவர்களே இரண்யாட்சனும், இரண்யகசிபுவும். இரண்யாட்சன் ஒரு முறை பூமியை களவாடி, கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதனை வராக அவதாரம் எடுத்து திருமால் மீட்டதோடு, இரண்யாட்சனை வதம் செய்தார்.

உலகில் முதலில் தோன்றிய இடம் ‘வராகபுரி’ என்னும் கும்பகோணம் என்று இந்தக் கோவில் தல புராணம் சொல்கிறது. எனவே முதலில் இந்தக் கோவிலில் உள்ள ஆதிவராகப் பெருமாளை வழிபட்ட பிறகே, அனைத்து தெய்வங்களையும் வழிபட வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அம்புஜவல்லி உடனாய ஆதிவராகப் பெருமாள் திருக்கோவில் என்று அழைக்கப்படும் இத்தலத்தில், மூலவராகவும் உற்சவராகவும் ஆதிவராகப் பெருமாள் வீற்றிருக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி.

சக்கரபாணி கோவில்

கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில், இரண்டாவது பெரிய கோவிலாக திகழ்வது, சக்கரபாணி திருக்கோவில் ஆகும். காவிரி ஆற்றின் தென்கரையில், பெரிய கடைத்தெருவின் வடக்கு மூலையில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. இத்தல மூலவர், சக்கர வடிவமான தாமரைப் பூவுடன் கூடிய அறுங்கோண எந்திரத்தில் வீற்றிருந்து காட்சி தருவதால், ‘சக்கரபாணி’ என்று பெயர் பெற்றார். எட்டு கரங்களைக் கொண்டு நின்ற கோலத்தில் அருளும் இந்த பெருமாளிடம், சங்கு, சக்கரம், வில், கோடரி, உலக்கை, மண்வெட்டி, கதை, செந்தாமரை போன்றவை காணப்படுகின்றன. சக்கரபாணி, ருத்ராட்சம் வைத்திருப்பவர் என்று கருதப்படுவதால், அவருக்கு சிவபெருமானைப் போல வில்வ அர்ச்சனை செய்யப்படுகிறது.

இத்தல தாயாரான விஜயவல்லியும் நின்ற கோலத்திலேயே அருள்புரிகிறாள். சூரிய பகவான் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளார். எனவே இது ‘பாஸ்கரத் தலம்’ என்றும் அழைக்கப்படுகிறது. சாரங்கபாணி கோவிலில் இருப்பதைப் போல, இங்கும் தட்சிணாயன வாசல் மற்றும் உத்தராயன வாசல் என்று இரண்டு வாசல்கள் இருக்கின்றன.

ராமசாமி கோவில்

கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்கு தென்மேற்கில், தஞ்சாவூர் செல்லும் சாலையில் பெரிய கடைத்தெருவிற்கு போகும் வழியில் ராமசாமி கோவில் அமைந்திருக்கிறது. நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர் என்பவர், இந்தக் கோவிலை கட்டி எழுப்பியதாக தல வரலாறு சொல்கிறது. கோவில் கருவறையில் உள்ள மூலவர், பட்டாபிஷேக ராமராக வீற்றிருக்கிறார். ராமரும், சீதையும் ஒரே ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பரதன் குடைபிடித்திருக்கிறான். சத்ருக்கணன் சாமரம் வீசுகிறான். லட்சுமணன், வில் ஏந்திய நிலையில் ராமனின் கட்டளைக்காக காத்திருக்கிறான். ஆஞ்சநேயர் தன்னுடைய கையில் வீணை ஏந்தி, ராமாயணத்தை பாராயணம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார்.

விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காத்தல், தன்னை மீண்டும் அயோத்தி அழைத்துச் செல்ல வந்த பரதனுக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தல், தனக்காக உயிர் கொடுத்த ஜடாயுவுக்கு மோட்சம் அளித்தல், முனிவர்களுக்காக அரக்கர்களை அழித்தல், தன்னுடைய துன்பங்களைக் கூறி வருந்திய சுக்ரீவனுக்கு, ஆறுதல் கூறி அவனுடைய ராஜ்ஜியத்தைப் பெற்றுக்கொடுத்தல், தன்னிடம் தஞ்சம் என்று வந்த விபீஷணனுக்கு, அபயமளித்து ராஜ்ஜியம் அளித்தல் என்று ராமபிரான் செய்தவை அனைத்தும், இந்தக் கோவிலின் உட்பிரகாரத்தில் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. கலை மற்றும் சிற்ப ஓவியங்களுக்கு இந்தக் கோவில் ஒரு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் மிகையல்ல.
Tags:    

Similar News