செய்திகள்
கோப்புப்படம்

இந்தியா- பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது: கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

Published On 2021-10-20 07:29 GMT   |   Update On 2021-10-20 07:29 GMT
ஜம்மு- காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், பாகிஸ்தானுக்கு எதிரான டி20-யில் இந்தியா விளையாடக்கூடாது என்ற கருத்து வலுத்து வருகிறது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் வருகிற 24-ந்தேதி மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

மத்திய மந்திரி கிரிராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா- பாகிஸ்தான் இடையே உறவுகள் நல்ல முறையில் இல்லை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்தக்கூடாது. இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

மற்றொரு மத்திய மந்திரி ராம்தாஸ்அத்வாலே, ‘‘20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது’’ என்று எதிர்ப்பு தெரிவித்தார். பஞ்சாப் மந்திரி ஒருவர் அளித்த பேட்டி யில், ‘‘இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டியை ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடனான போட்டியை ரத்து செய்ய முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ.-யின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:-

ஜம்மு காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு ஐ.சி.சி.யுடன் பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் செய்துள்ளது. போட்டியில் பங்கேற்போம் என உறுதி அளிக்கப்பட்டு விட்டது.

எனவே இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை ரத்து செய்ய முடியாது. ஐ.சி.சி.யிடம் அளித்த உறுதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மீற முடியாது.

எந்த நாட்டு அணியுடனும் விளையாட முடியாது என்று மறுக்கவும் முடியாது. ஐ.சி.சி. தொடர்பான போட்டிகளில் இந்திய அணி நிச்சயமாக விளையாடும்.

இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.
Tags:    

Similar News