செய்திகள்
கைதான கொள்ளையர்களுடன் தனிப்படை போலீசார்.

காஷ்மீரில் ஒரே குடும்பத்தில் 5 பேரை தீர்த்துக்கட்டியவர்கள்- சென்னை ரெயில் கொள்ளையர்கள் பற்றி திடுக் தகவல்

Published On 2018-11-13 06:12 GMT   |   Update On 2018-11-13 06:12 GMT
சென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், ஏற்கனவே காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
சென்னை:

சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் துப்பு துலக்கி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர் சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காவியா, பில்டியா ஆகிய 5 கொள்ளையர்களை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்ததும் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிபயங்கரமான கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவங்களில் குடும்பத்தினரோடு ஈடுபடுவதை இக்கும்பல் வழக்கமாக வைத்துள்ளது.

ரெயில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் குடும்பத்தினர், கடந்த 2006-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்தவர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் உறவினரான கிரண் 2012-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொரு உறவினரான சங்காராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரெயில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் மோஹர் சிங்கின் தந்தையின் சகோதரருக்கு பிறந்தவன் தான் கிரண். போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு கிரண் இரையான பின்னரே மோஹர் சிங், கொள்ளை கூட்டத்துக்கு தலைவனாகி உள்ளான்.

தனது குற்றச்செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மோஹர்சிங், கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் 2 பேரை சுட்டுக் கொன்றான். இந்த கொலை வழக்கில் மோஹர் சிங்கின் மனைவி பன்வாரா, சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் பிடி இறுகியதால் மோஹர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் தென் இந்தியாவுக்கு தப்பி வந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் வியாபாரிகள் போல் தங்கி இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த ஆண்டு மோஹர் சிங் தனது கூட்டாளிகளுடன் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் இக்கொள்ளை கும்பல் தங்கியது. அப்போது தான் சேலம் செல்லும் ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவது இவர்களுக்கு தெரிய வந்தது.

கோப்புப்படம்

சென்னை ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் அதில் பயணம் செய்து ஒத்திகை பார்த்தனர்.

கொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங் மற்றும் கூட்டாளிகள் காலியா ருசி, பில்டியா ஆகியோர் அயோத்தியா பட்டினம் மற்றும் விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் செய்து நோட்டமிட்டனர்.

சின்ன சேலம்- விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 45 நிமிடங்கள் ரெயில் நிற்காமல் செல்வதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.

இதன்படி சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் வைத்து 4 பேரும் பணம் இருந்த பெட்டியில் ஏறி கூரையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மரப் பெட்டியை உடைத்து 6 லுங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை கட்டி மேலே ஏறினார்கள்.

பின்னர் வயலூர் மேம்பாலம் அருகே இந்த மூட்டைகளை வீசினர். அங்கு ஏற்கனவே காத்திருந்த மோஹர் சிங்கியின் கூட்டாளிகள் பணமூட்டைகளை பத்திரமாக எடுத்து கொண்டு தப்பினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய கொள்ளையர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பணத்தை பங்கு போட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டம்போட்டு வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation
Tags:    

Similar News