செய்திகள்
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை படத்தில் காணலாம்.

30 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம்- விவசாயிகள் வேதனை

Published On 2020-11-20 07:06 GMT   |   Update On 2020-11-20 07:06 GMT
திருவெறும்பூர் சுற்றுவட்டார பகுதியில் 4 நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சுமார் 30 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின.
திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசன்குடி, நடராஜபுரம் ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அடப்பன் பள்ளம், காங்கி வயல், சிபி, வண்ணாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 100 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில் திருவெறும்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

அடப்பன் பள்ளம், ஆனந்த காவிரி, மாவடியான் குழுமி, காவிரி வடிகால் குழுமி, வெண்ணாறு வடிகால் குழுமி, கல்லணை கால்வாய் வடிகால் குழுமிகள் சரியாக பராமரிக்க படாததாலும், போதிய வடிகால் வசதி இல்லாததாலும், அடப்பன் பள்ளம், காங்கி வயல், சிபி, வண்ணாங்குளம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள சுமார் 50 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியது.

இதில் 20 ஏக்கர் பரப்பளவில் தேங்கிய மழைநீர் வடிந்துவிட்டது. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை. இதனால் 30 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுக தொடங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அரசங்குடி பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

கடந்த 2005-ம் ஆண்டு வெள்ளத்தின்போது வடிகால் கள் சரியாக தூர்வாரப்படாமல் அரசன்குடி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வடிகால் தூர்வாரப்படவேண்டும். புதுக்கோட்டை பகுதி மற்றும் குண்டூர் பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த பகுதிக்கு தான் கடைசியில் வந்து சேரும். மேலும் உய்யகொண்டான் வாய்க்காலின் கடைசி பகுதியாக அரசன்குடி உள்ளது.

ஆனால் போதிய வடிகால் வசதி இல்லாததாலும், இந்த பகுதியில் உள்ள வடிகால் குழுமிகள் சரியாக பராமரிக்க படாததாலும், பல்வேறு குழுமி பழுதடைந்து உள்ளதாலும், இந்த பகுதியில் தண்ணீர் தேங்குகிறது. எனவே குழுமிகளை பிரித்து புதுப்பிப்பதுடன், மழைநீர் மற்றும் வடிகால் நீர் வடிவதற்கு ஏதுவாக புதிய குழுமிகளை அமைத்து தரவேண்டும். மேலும் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News