உள்ளூர் செய்திகள்
தொண்டி அருகே ஆழ்கடலில் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் லாஞ்சியடி விசைப்படகு மீனவர்கள்.

ஏற்றுமதி பாதிப்பால் தவிக்கும் விசைப்படகு மீனவர்கள்

Published On 2022-01-13 10:06 GMT   |   Update On 2022-01-13 10:06 GMT
தொண்டி அருகே ஏற்றுமதி பாதிப்பால் விசைப்படகு மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
தொண்டி


ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் லாஞ்சியடி மற்றும் சோழியக்குடி கடலோர கிராம மீனவர்கள். இந்தப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. 

வாரத்தில் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் மட்டுமே மீன்பிடிக்க கடலுக்குச் சென்று செவ் வாய், வியாழன், ஞாயிற் றுக்கிழமைகளில் கரை திரும்புவர்.  ஒருமுறை கடலுக்குச் செல்ல டீசல், வேலை யாட்கள், உணவு என சுமார் ரூபாய் 30 ஆயிரம் வரை செலவாகும். 

கரை திரும்பியபின் ஆழ்கடலில் பிடிக்கப்பட்ட இரால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருட்கள் கேரளா உட்பட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

கடந்த சில வருடங்களாக கொரோனோ பெரும் தொற்று மற்றும் இயற்கை சீற்றம் காரணமாகவும் கடல் தொழிலுக்கு செல்ல முடியாமல் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் தற்போது ஒமிக்கிரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் பெரும் இழப்புகளை ஏற் படுத்தியுள்ளது. 

பொதுவாக வாரத்தில் 3 நாள் மட்டுமே கடலுக்கு சென்று திரும்பிய இந்த விசைப்படகு மீனவர்கள் தற்போது 2 நாட்கள் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.

இது குறித்து லாஞ்சியடி விசைப்படகு மீனவர் தென்னரசு கூறும்போது, பொதுவாக ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாட்கள் என்பதால் வியாபாரம் நல்லமுறையில் நடைபெறும். 

உயிரை பணயம் வைத்து ஆழ்கடலில் பிடித்து வரும் கடல் உணவுப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும். அசைவப்பிரியர்களும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளில் இரால், நண்டு போன்ற கடல் உணவுகளை விரும்பிச் சாப்பிடுவார்கள். 

இந்த ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் எங்களுக்கு தொழில் பாதிப்பு ஏற்படுவதோடு அசைவப்பிரியர்களுக்கு ஆழ்கடலில் பிடிக்கும் இரால், நண்டு போன்ற கடல் உணவுப்பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது என்றார்.

Tags:    

Similar News