செய்திகள்
கோப்புப்படம்

அமீரகத்தில் 30 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்க திட்டம்- ஆய்வில் தகவல்

Published On 2020-10-20 06:29 GMT   |   Update On 2020-10-20 06:29 GMT
அமீரகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 30 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது என தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்:

கொரோனா பாதிப்பு காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகளும் இதற்கு விதிவிலக்கு இல்லை. வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்து வரும் ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் சம்பள குறைப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து தனியார் நிறுவனம் ஒன்று அமீரகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா பாதிப்பு காரணமாக 30 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. ஒரு சில நிறுவனங்கள் ஏற்கனவே தங்களிடம் வேலை செய்து வரும் ஊழியர்களை குறைத்துள்ளன. இந்த ஊழியர்கள் சிலர் வேறு சில நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கும் போது வேலை கிடைப்பதில் சிரமங்கள் இருந்து வருகின்றன. ஒரு சிலர் தாங்கள் ஏற்கனவே வாங்கி வந்த சம்பளத்தை விட குறைவான சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து வருகின்றனர்.

வேலை கிடைக்காதவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுமட்டுமல்லாமல் 30 சதவீத நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை சராசரியாக தலா 10 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காலங்களில் ஒரு சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைத்துள்ளது.

மேலும் சில நிறுவனங்கள் வருகிற டிசம்பர் மாதம் வரை 75 சதவீதம் மட்டுமே சம்பளத்தை வழங்க உள்ளது. இதனால் குடும்பத்துடன் வசித்து வரும் ஊழியர்கள் எவ்வாறு செலவுகளை சமாளிப்பது? என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். ஒரு சிலர் தங்களது குடும்பத்தினரின் விசாக்களை ரத்து செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வருகின்றனர். வங்கி கடன் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ள ஊழியர்கள் அதனை திரும்ப செலுத்தும் திட்டத்தை முறையாக மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகின்றனர்.

ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதை பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. இதனால் ஊழியர்களின் திறமை மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News