செய்திகள்
மின்சார ரெயில்களில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

சென்னையில் மீண்டும் மின்சார ரெயில்களில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

Published On 2021-06-22 05:19 GMT   |   Update On 2021-06-22 05:19 GMT
சென்ட்ரல், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், அண்ணாநகர், திருமங்கலம், வடபழனி, அசோக்நகர், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கணிசமாக ஏறி இறங்கினார்கள்.

சென்னை:

சென்னையில் ஒரு மாதத்திற்கு பிறகு பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் சேவை நேற்று கூடுதலாக இயக்கப்பட்டது.

முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடியவர்களுக்கு மட்டுமே மின்சார ரெயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்தது. வாகனங்களும் சாலையில் அதிகமாக சென்றன. அரசு துறைகள் முழு அளவில் செயல்படுவதால் ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு வேலைக்கு சென்றதால் மின்சார ரெயில்களில் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. பயணிகள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்யும் வகையில் 500-க்கும் மேற்பட்ட அளவில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன.

நேற்றைவிட இன்று மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிறு வியாபாரிகள், தொழிலுக்கு செல்வோர், வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் அதிகம் பேர் பயணம் செய்தனர்.

செங்கல்பட்டு, தாம்பரம்- கடற்கரை மார்க்கத்திலும், திருவள்ளூர், அரக்கோணம் வழித்தடத்திலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில்களில் நீண்ட நாட்களுக்கு பிறகு பயணம் செய்வதை காணமுடிந்தது.

வியாபாரிகள், பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது. மற்ற நேரத்தில் குறைவான அளவில் மக்கள் பயணம் செய்தனர்.

மின்சார ரெயில்களில் பயணம் செய்ய இன்னும் கட்டுப்பாடு நீடிப்பதால் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

குறித்த நேரத்திற்கு மட்டும்தான் டிக்கெட் வினியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள் பயணம் செய்ய இன்னும் அனுமதிக்கவில்லை. ஆனாலும் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மூர்மார்க்கெட், எழும்பூர், தாம்பரம் கடற்கரை ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பறக்கும் ரெயில் சேவை மற்றும் மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி இடையேயும் சேவை அதிகரிக்கப்பட்டு இருப்பதால் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் அதிகளவு பயணம் செய்தனர்.


மெட்ரோ ரெயில் சேவை வழக்கமான அளவில் தொடங்கப்படவில்லை என்றாலும் அலுவலகம் செல்லக்கூடியவர்களுக்கு வசதியாக இருந்தது. காலை, மாலை நேரங்களில் அதிக சேவையும் மற்ற நேரங்களில் குறைவாகவும் இயக்கப்பட்டன.

இதனால் மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் குறைந்த அளவில் பயணம் செய்தனர்.

முக கவசம் அணிந்து ரெயில்களில் அமர்ந்து பயணித்தனர். சென்ட்ரல், கோயம்பேடு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், அண்ணாநகர், திருமங்கலம், வடபழனி, அசோக்நகர், மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கணிசமாக ஏறி இறங்கினார்கள்.

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News