செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2020-10-24 08:05 GMT   |   Update On 2020-10-24 08:05 GMT
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 19-ந் தேதி முதல் பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. 20-ந் தேதி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனிடையே நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 14 ஆயிரத்து 907 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 129 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.83 அடியாக இருந்தது.
Tags:    

Similar News