உள்ளூர் செய்திகள்
தடுப்பூசி மையத்தை கலெக்டர் விஷ்ணு ஆய்வு செய்த காட்சி.

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 68 சதவீத மாணவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்-கலெக்டர் தகவல்

Published On 2022-01-08 12:37 GMT   |   Update On 2022-01-08 12:37 GMT
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 68 சதவீத மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்.
நெல்லை:

பாளை ஐகிரவுண்ட் பகுதியில் உள்ள காந்திமதி உயர்நிலைப் பள்ளியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை கலெக்டர் விஷ்ணு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்தமுறை போலவே தற்போதும் காந்திமதி பள்ளியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நாளை முதல் செயல்பட தொடங்கும். 

கொரோனா தொற்றுடன் வரும் நோயாளிகள் இந்த மையத்தில் வைத்து பரிசோதிக்கப்படுவார்கள். அப்போது வீட்டில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள், சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்படுபவர்கள், நெல்லை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைக்கு அனுப்பப்படுபவர்கள் என 3 வகையாக பிரிக்கப்படு வார்கள். 

பின்னர் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தக்கவாறு அந்தந்த மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள்.


கூடங்குளம், வள்ளியூர் அரசு மருத்துவமனைகளை தொடர்ந்து பாளை அருண்ஸ் மகாலிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சேரன்மகாதேவி, அம்பை அரசு மருத்துவ மனைகளிலும் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாமிற்கு 577 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் தடுப்பூசிகள் குறைவாக செலுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறியப்பட்டு அந்த பகுதிகளுக்கு இன்று சிறப்பு வாகனம் மூலம் தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் இதுவரை 75 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மற்றவர்களுக்கு விரைவில் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

வணிக வளாகங்கள், ஜவுளி நிறுவனங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.தடுப்பூசி செலுத்தாமல் பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

நெல்லை மாவட்டத்தில் எந்தவித நிகழ்ச்சிகளையும் நடத்துவ தற்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்கள் 100 சதவீதம் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுடையவர்களில் இதுவரை 68 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மொத்தம் உள்ள 76 ஆயிரத்து 400 பேரில் 52 ஆயிரத்து 81 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். மற்றவர்களுக்கும் செலுத்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

தற்போது 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி உள்ளது. அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

தற்போது மாவட்டத்தில் 104 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 16 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

 தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News