இந்தியா
கொரோனா பலி

டெல்லியில் கொரோனாவுக்கு பலியான 97 பேரில் 70 பேர் தடுப்பூசி போடாதவர்கள்

Published On 2022-01-15 02:23 GMT   |   Update On 2022-01-15 02:23 GMT
டெல்லியில் 4 நாளில் கொரோனாவுக்கு பலியான 97 பேரில் 70 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்ற அதிர்ச்சி தரும் உண்மைத்தகவலை டெல்லி அரசு வட்டாரம் தெரிவிக்கிறது.
புதுடெல்லி :

கொரோனா வைரஸ் தொற்றை வீழ்த்தும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. ஆனாலும்கூட இன்னும் தடுப்பூசி போடுவதில் மக்களிடம் ஒரு அசட்டைப்போக்கு இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் தடுப்பூசி போடாதவர்களுக்கு கொரோனாவோ அல்லது ஒமைக்ரான் போன்ற உருமாறிய கொரோனாவோ பாதித்தால் நிலைமை மோசம் அடையும் வாய்ப்பும், உயிரிழப்பு ஆபத்தும் இல்லாமல் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது.

டெல்லியில் கடந்த 9-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரையில் 4 நாட்களில் கொரோனாவால் மொத்தம் 97 பேர் பலியாகி உள்ளனர். அவர்களைப் பற்றிய முக்கிய புள்ளி விவரங்கள் வருமாறு:-

* டெல்லியில் இறந்த 97 பேரில், 70 பேர் தடுப்பூசி போடாதவர்கள்தான்.

* பலியானவர்களில் 8 பேர் மட்டும்தான் 2 டோஸ் தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள்.

* உயிரிழந்தோரில் 19 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்திக்கொண்டவர்கள் ஆவார்கள்.

* இறந்தவர்களில் 41-60 வயதினர் அதிகமாக உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 37 ஆகும்.

* 61-80 வயதில் 27 பேர் இறந்துள்ளனர்.

* 19- 40 வயதினர் 18 பேர் இறந்துள்ளனர்.

* 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 8 பேர் பலியாகி உள்ளனர்.

* குழந்தைகள் உள்பட 18 வயதுக்குட்பட்டோர் 7 பேர் இறந்திருக்கிறார்கள்.

இதே போன்று கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையில் 5 நாட்களில் 46 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இவர்களில் 35 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்தான். 34 பேர் இணைநோய் இருந்தவர்கள். இறந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் 23 பேர் ஆவர்.

இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்தும் உண்மை, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அலட்சியம் கூடாது என்பதுதான்.
Tags:    

Similar News